அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி எனப்படும் வேதாத்திரி அடிகளார்,
பொள்ளாச்சி நகருக்கு அருகே வால்பாறை மலையோரத்தில் ஆழியாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ள இடத்தில் “அருட்பெருஞ்ஜோதி நகர்” எனும் நகரம் வேதாத்திரி மகரிஷியால் 1984 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. “அன்பொளி” என்னும் ஆன்மீக இதழ் ஒன்றையும் வெளியிட்டார். இன்றும் “தமிழ், ஆங்கிலம் ” மொழிகளில் வெளிவருகின்றன.
உலக அமைதிக்கு வித்திட்டவர் , ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு சமுதாயப் பணி ஆற்றி வந்தவர் வேதாத்திரி அடிகளார்.
இவர் ,சென்னைக்கு அண்மையில் உள்ள கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பமுதலியார் முருகம்மாள் (சின்னம்மாள்) இணையருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார்.
சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும் அறிந்து கொண்டார். இவரது குடும்பச்சூழலில் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்பத் தொழிலான தறிநெய்தலைச் செய்யத் தொடங்கினார்.
18ஆவது அகவையில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார்.
சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளைக் கற்றார் மகரிஷி. தனது வாழ்க்கையின் குறிக்கோளாகிய முழுமையை உணரும் நோக்கத்தால் உந்தப்பட்டு;
சித்த,ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ துறைகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.மேலும் இரண்டாவது உலகப்போரின்போது முதலுதவிப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார்.
பின்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்று, தனது சுய முயற்சியினால் பல்லாயிரம் நபர்களுக்கு வேலை அளிக்கக்கூடிய அளவிற்கு ஒரு பெரியநெசவுத் தொழிற்சாலையை உருவாக்கினார்.
வியாபாரம் திடீர் சரிவு நிலையை அடைந்தது; இருப்பினும் தன்னிடம் பணிபுரிந்த 2,000 குடும்பங்களையும் காப்பாற்றுவதற்காக ஈட்டிய பொருள் அனைத்தையும் அவர்களுக்கே செலவழித்து அனைத்துப் பொருள் வளத்தையும் இழந்தார்.
அப்படியிருந்தும் மனத்தைத் தளரவிடாது மீண்டும் கடுமையாக உழைத்து படிப்படியாக பொருளாதாரத்தில் தன்னை மேம்படுத்திக் கொள்ள அரிசி வியாபாரம் போன்ற பல்வேறுபட்ட தொழில்களைச் செய்து தனக்கும், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் துன்பத்தைப் போக்கவும் பாடுபட்டார்.
வறுமையிலேயே வாழ அடியெடுத்து வைத்த அவரது உள்ளத்தில் வறுமை என்றால் என்ன? கடவுள் என்பது எது? அதை ஏன் காண முடியவில்லை? மனித வாழ்க்கையிலேயே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன போன்ற கேள்விகள் அவ்வப்போது ஒலித்துக் கொண்டே இருந்தன.
அதன் விளைவாக, தனது 35ஆம்அகவையில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார்.
அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும். 46ஆம்அகவையில் உலக அமைதிக்காக ‘ உலகசமாதானம்’ WorldPeace என்ற 200 பாடல்கள் நூலை எழுதி 1957ல் வெளியிட்டார்.
இந்த இருமொழிகள் (தமிழ், ஆங்கிலம்) நூலை பாடத்திட்ட வழி பள்ளி, கல்லூரிகளில் பரப்ப வாழ்நாள் இறுதிவரை உழைத்து வெற்றி பெற்றார். இன்று பல பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, மேல்பட்டப்படிப்பு, ஆராய்ச்சிப்படிப்பில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
சித்தர்களின் நூல்களைக் கற்று, தியானத்தில் வெகுவாக ஈடுபட்டு தன்னை அறிதல் என்ற அகத்தாய்வு முறையில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டார். பின்னர் தனது நெசவு தொழிலை முற்றிலும் விட்டு விட்டு தன்னை முழுமையாக ஆன்மீகத் துறையில் ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும் மனித வாழ்க்கையைப் பற்றியும் தவநிலையில் தான் பெற்ற கருத்துக்களைப் பல கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் புத்தக வடிவங்களில் இந்த உலகுக்கு மகரிஷி அவர்கள் அளித்துள்ளார்கள்.
மனிதகுலம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளையும் சாதனை முறைகளையும் உலகமெங்கும் பரப்பிடும் நோக்கத்தின் அடிப்படையில் 1958-ஆம் ஆண்டில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய உலகசமுதாயசேவாசங்கம் இன்று இந்தியாவிலும், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
வேதாத்திரி மகரிஷி தனது 95வது வயதில் மார்ச் 28, 2006 செவ்வாய்க்கிழமையன்று மறைந்தார்.
வேதாத்திரி மகரிஷி ஏறக்குறைய தமிழிலும் ஆங்கிலத்திலும் சேர்த்து எண்பது நூல்களை எழுதியுள்ளார், அவற்றில் சில:
(i)வேதாத்திரியத்தின் இறைநிலை விளக்கம்
மற்றும் அநேக நூல்கள்.









