தொழிற்நுட்பம் வளர்கிறது, ஆனால் மன நிம்மதி குறைகிறது- ஏன் இந்த முரண்பாடு?
தொழில்நுட்பம் வளர வளர அது மனித சுமைகளைக் குறைத்து நமது வாழ்க்கையை எளிதாக்க வேண்டும் என்பதே தர்க்கரீதியான
பார்வை. ஆனால் இன்று நாம் முன்னெப்போதும் இல்லாத ஒரு உளவியல் நெருக்கடியில் சிக்கியிருப்பதைக் காண்கிறோம்.
2026-ஆம் ஆண்டின் கணக்கெடுப்புகளின்படி உலகெங்கிலும் 33.2 கோடிக்கும் அதிகமான மக்கள் தீவிர மனச்சோர்வினால்
பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் இதற்கான காரணத்தை தொழில்நுட்பத்தின் விளைவாக/தோல்வியாகப் புரிந்து கொள்கிறார்கள்.
ஆனால் இதில் நாம் அவதானிக்க வேண்டிய காரணிகள் பல இருக்கின்றன.
உற்று நோக்கினால், நாம் ஓர் ஆழமான ‘உயிரியல்-பண்பாட்டு இடைவெளி’ (Biological-Cultural Lag) யில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
என்பதே எனது புரிதல்.
இது சமூகவியலாளர் வில்லியம் எஃப். ஒக்பர்னின் (William F. Ogburn) ‘பண்பாட்டு இடைவெளி’ (Cultural Lag) என்ற கருத்தை உயிரியல்
பரிணாமத்தின் கோணத்தில் நான் விரிவுபடுத்திப் பார்க்கும் ஒரு நீட்சியாகும்.
உயிரியல் பரிணாமத்தின் மெதுவான வேகத்திற்கும், பண்பாட்டு மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களின் அதிவேகத்திற்கும் இடையே
உருவாகும் உராய்வே இதன் மையமாகும்.
தொழில்நுட்பம் நமது உணர்வுப்பூர்வமான அறிவை நேரடியாக உயர்த்திவிட்டது என்று கூற முடியாவிட்டாலும், அது நமது
உணர்வுகளையும் சமூக அனுபவங்களையும் முன்பைவிட அதிகமாக வெளிப்படுத்தி, அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை
தீவிரப்படுத்தியுள்ளது.
ஆனால் அந்த அதிநவீன உலகை எதிர்கொள்ள நாம் இன்னும் ஒரு பழமையான, குழு சார்ந்த ஆதி மூளையின் கட்டமைப்பையே
பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
மனித மூளை உருவான பரிணாமச் சூழல் சிறிய பழங்குடி சமூகங்களும், மெதுவான தகவல் ஓட்டமும், வரையறுக்கப்பட்ட சமூக
மதிப்பீடுகளும் கொண்டதாக இருந்தது.
ஆனால் இன்று நாம் வாழும் உலகம் 24 மணி நேர தகவல் பெருக்கு, முடிவற்ற சமூக ஒப்பீடுகள், மற்றும் நிரந்தரமான
காட்சிப்படுத்தல் (visibility) ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. பரிணாம உளவியலில் இது ‘evolutionary mismatch’ என அழைக்கப்படும் ஒரு
உராய்வை உருவாக்குகிறது.
அதாவது, நமது உயிரியல் அமைப்பு உருவாக்கப்படாத ஒரு சூழலை நமது மூளை தொடர்ந்து சமாளிக்க முயல்கிறது.
நாம் ‘உயிர் பிழைத்தல்’ (Survival) என்ற நிலையிலிருந்து ‘முக்கியத்துவம்’ (Significance) என்ற நிலைக்கு நகர்ந்தபோது, ஒருவித
‘தன்னாட்சியை’ (Autonomy) பெற்றோம் என்று நான் கருதுகிறேன். உயிர் பிழைப்பின் அடிப்படைத் தேவைகளைத் தாண்டிய பிறகு,
மனிதர்கள் தங்கள் அடையாளம், அங்கீகாரம் மற்றும் சுயநிர்ணயத்தை அதிகமாக நாடத் தொடங்கினர். ஆனால் சமூக ஊடகங்கள்
மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) இந்த நவீன யுகத்தில், இந்தத் தன்னாட்சி நம்மிடம் ஒரு புதிய விலையைக் கோருகிறது .
அதுதான் வெளிப்படைத்தன்மை.
நமது அடையாளத்தை நாம் முழுமையாக வெளிப்படுத்தாவிட்டாலும், அல்காரிதம்கள் நமது நடத்தை முறைகள், விருப்பங்கள் மற்றும் தொடர்புகளின் அடிப்படையில் சில அம்சங்களை கணிக்கத் தொடங்கியுள்ளன. இந்த வளர்ந்து வரும் தரவு-வெளிப்படைத்தன்மை மனிதர்களுக்கு ஒரு தனித்துவமான உளவியல் சுமையை உருவாக்குகிறது.
நமது உயிரியல் மூளை சமூக நிராகரிப்பையும் உறவு உராய்வுகளையும் பல சமயங்களில் உயிரியல் அச்சுறுத்தலுக்குச் சமமான பதற்றமாகப் பதிவு செய்கிறது.
அதே நேரத்தில், நமது நவீன விழிப்புணர்வோ, நச்சுத்தன்மையான உழைப்பு கலாச்சாரம் மற்றும் எல்லைகளற்ற வேலை நேரங்களை ‘உளவியல் ரீதியான நாசவேலை’ (Emotional Sabotage) என்று அடையாளம் காண்கிறது.
முந்தைய தலைமுறைகள் பெரும்பாலும் உயிர் பிழைப்பையும் பொருளாதார பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்திய நிலையில், இன்றைய தலைமுறையின் ஒரு பகுதி மனநலன், உணர்வுப்பூர்வமான பாதுகாப்பு மற்றும் எல்லையமைப்பை அதிகமாக முன்னிறுத்துகிறது.
பழைய மூளையின் பயத்திற்கும் புதிய விழிப்புணர்வின் எல்லையமைப்பிற்கும் இடையே நடக்கும் இந்த உளவியல் மற்றும் தார்மீக உராய்வே தற்போதைய தலைமுறை இடைவெளியின் (Generation Gap) முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என்பது எனது கணிப்பு.
முந்தைய தலைமுறையினர் சகிப்புத்தன்மையையும் தடித்த தோலையும் உயிர் பிழைப்பதற்கான அறமாகக் கருதிய நிலையில், இன்றைய இளைய தலைமுறையினரின் (Gen Z) ஒரு பகுதி அதிகப்படியான உணர்திறனை ஒரு தற்காப்பு முறையாகப் பயன்படுத்துகிறது என்றே நான் பார்க்கிறேன்.
மனிதர்கள் ஒருவரை ஒருவர் காயப்படுத்தும் நுட்பமான வழிகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், அந்த உணர்திறன் புதிய சமூக கருவியாக மாறியுள்ளது.
இந்த உராய்வை மேலும் தீவிரப்படுத்தும் இன்னொரு அம்சம் ‘அறிவாற்றல் மிகைச்சுமை’ (Cognitive Overload) ஆகும். முன்னோர் உலகில் தேர்வுகள் குறைவாக இருந்தன. இன்று முடிவற்ற தகவல்களும் தேர்வுகளும் மனித கவனத்தையும் தீர்மான ஆற்றலையும் தொடர்ந்து துண்டாக்குகின்றன.
எனவே தொழில்நுட்பம் நமது வேலைகளை எளிதாக்கும். ஆனால் உளவியல் உராய்வு களை எளிதாக்காது. எதிர்காலத்தில் இன்னும் சிறந்த தொழில்நுட்ப வடிவமைப்புகள் உருவானாலும் இந்த உளவியல் உராய்வு முழுமையாக மறைந்துவிடாது என்றே நான் நினைக்கிறேன்.
மனிதனும் செயற்கை நுண்ணறிவும் அறிவாற்றல் ரீதியாக இணையும் ஒரு ‘கலப்பு அமைப்பு’ (Hybrid System) உருவாகும் எதிர்காலத்தில்கூட, சில உராய்வுகள் குறையக்கூடும். ஆனால் புதிய அடையாள, தன்னாட்சி மற்றும் சார்பு சிக்கல்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது.
இந்த உயிரியல்-பண்பாட்டு உராய்வு தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் மட்டுமல்ல; மனித வளர்ச்சியின் எதிர்கால வடிவங்களிலும் தொடரக்கூடிய ஒரு பரந்த மாதிரியாக இருக்கலாம்.
மனித இனம் தனது உயிரியல் எல்லைகளைக் கடந்து ஒரு பேரண்ட நாகரிகமாக (Cosmic Civilization) மாறும் தொலைதூர எதிர்காலத்திலும்கூட, வாழ்வின் சுமை மாறுபடுமே தவிர அழியாது என்பது எனது பார்வை.
நாம் பிற கிரகங்களுடனும் பேரண்டத்துடனும் தொடர்பு கொள்ளும்போது, சுதந்திரமும் உணர்வுகளும் இன்னும் உயர்ந்த வரிசையில் புதிய சிக்கல்களை எதிர்கொள்வோம்.
அப்போது நமது போராட்டம் ஒரு பணியிடத்தையோ அல்லது அல்காரிதத்தையோ சார்ந்ததாக இருக்காது; விண்மீன்களுக்கு இடையேயான தனிமையையும் பேரண்ட அடையாளத்தையும் வரைபடமாக்குவதற்கான ஒரு பிரக்ஞை விரிவாக்கமாக அது இருக்கும்.
எனவே நவீன கால மன அழுத்தம் என்பது மனிதன் தன்னை மறுவரையறை செய்து கொள்ளும் ஒரு ‘வளர்ச்சி வலி’ (Growing Pain) என்றே நான் கூறுவேன். நாம் இனி வெறும் உயிர் பிழைப்பதில் திருப்தி அடைவதில்லை; உணர்வுப்பூர்வமான நேர்மையையும் (Emotional Integrity) அர்த்தமுள்ள இருப்பையும் நாடுகிறோம்.
தொழில்நுட்பம் உலகைச் சிக்கலாக்கும்போது, நமது உள்ளுணர்வுகளும் அதற்கு இணையாகச் சிக்கலாகின்றன. நமது ‘உயிரியல் வன்பொருள்’ (மூளை), நமது ‘உணர்வு மென்பொருளுடன்’ (விழிப்புணர்வு) முழுமையாக இணையும் வரை, ஒரு மேம்பட்ட ஆன்மா ஒரு பழமையான உடலில் சிக்கிக்கொண்டது போன்ற இந்தத் தவிப்பு தொடரக்கூடும்.










